கீரைக்காரம்மா (சிறுகதை)

கீரைக்காரம்மா

தினமும் வீட்டுல கொண்டாந்து கீரை விக்கிற அந்த அம்மா, போன வாரம் சாயங்காலமா வீட்டுக்கு வந்து அவங்க மகனுக்கு கலியாணம்னு பத்திரிக்கை குடுத்துட்டுப்போச்சு. தினம் காலையில கூடையில கீரக்கட்டு, முருங்கக்கா, வாழக்கா மாத்திரம் கொண்டாரும். கீரக்கட்டு 25 ரூ, முருங்கக்கா கட்டு 25 ரூ, 3 வாழக்கா 25 ரூவான்னு குடுக்கும்.

பழைய லேசா கிழிஞ்ச சேலை கட்டிருக்கும். அள்ளி முடிஞ்ச தலை. எண்ணையப் பாக்காத முடின்னு பாக்கவே கஸ்ட்டமா இருக்கும்.
கீரக்கட்டோட பத்திரிக்க குடுக்கக்கூடாதுன்னு தனியா வந்து குடுத்துட்டுப்போச்சு. இது மாதிரி பத்திரிக்கைகளைக் கண்டுக்கிறது இல்ல. அதுனால வாங்கி வச்சதோட சரி, மறந்தாச்சு. ஆனா கலியாணத்துக்கு மூணு நாளைக்கி முன்னாடி வந்து, 'அம்மா அஞ்சு நாளைக்கி நான் வரமாட்டேன், கலியாண வேலை இருக்கு'ன்னு சொல்லிட்டுப்போச்சு.

நான் என் பத்தினியிடம் சொன்னேன், 'ஏதாவது பணத்த கவர்ல போட்டுக்குடுத்து அனுப்பு. இதுக்கெல்லாம் போகமுடியாது. அன்னிக்கி எங்க ஆபீசுல என்னோட பாஸ் மகளுக்கு கலியாணம். அங்க போகணும். அவர் கண்டிப்பா வரணும்ன்னு சொல்லிருக்காருன்னு சொன்னேன். அதுக்கு என்னோட சம்சாரம் கேட்டா, நீங்க மொதநாளு ரிசப்சன் தானே போவீங்க. மறுநாள் ஞாயத்துக்கெழமதான் பக்கத்துக்கிராமத்துல அவங்க வீட்டுலதான் கலியாணம். போய்த்தலையக்காட்டிட்டு வரலாம்ன்னு சொன்னா. அதுக்கு அவ சொன்ன காரணம் அந்தம்மா கிட்டத்தட்ட பத்துவருசமா கீரை குடுக்குது .நல்ல பழக்கம்ன்னா. மேலிடத்தின் பேச்சை மீற முடியுமோ..? சரின்னு ஒத்துக்கிட்டேன்.

வழக்கம் போல ஆபீஸ்ல வேலை செய்யறவங்களோட ஒன்னா வேன் புடிச்சி பாஸ் வீட்டுக் கல்யாணத்துக்குப்போனோம். அங்க சரியான கூட்டம். பாஸ், மாப்பிள்ள வீட்டு ஆளுகளை கவனிக்கிறதுல பிசியா இருந்தாரு. வரிசையில நின்னுட்டு இருக்கும் போதே குறுக்க குறுக்க மாப்பிள்ள வீட்டு ஆளுகன்னு கும்பல் கும்பலா போய்ட்டு இருந்ததால லேட்டாகி ஒரு வழியா கைகுடுத்துக்கிட்டு இருக்குறப்ப யாரோ வர, எங்களை அம்போன்னு விட்டுட்டு பாஸ் அவர்கிட்ட ஓடினாரு. நாங்க ஃபார்மாலிட்டிக்கு நின்னு போட்டோ எடுத்துட்டு சாப்பிடப் போய் அங்க எடம்புடிச்சி சாப்பிட்டுட்டு வீடு வாரதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு.

மறுநாள் காலையிலதான் கீரக்காரம்மா வீட்டுக்கலியாணம். சம்சாரம் ரெண்டு இஞ்ச் பார்டர் போட்ட பட்டுசேலய கட்டிக்கிட்டு கொஞ்சமா நகை போட்டுக்கிட்டுக் கெளம்புனா. கார் எடுத்துக்கலாமான்னு கேட்டப்ப 'வேணாம், நாம ரொம்ப பகட்டா அங்க போகப்புடாது. அவங்களே சுமாராத்தான் இருப்பாங்க. அளவோட இருக்குறது தான் நல்லது. நம்மமேல கண்ணு பட்டுடும்ன்னு' சொன்னா. அதுக்கு அப்பீல் பண்ணுவனா? நானும் பைக் எடுத்துட்டு கெளம்புனேன். கவருல 201 போட்டு சீல் பண்ணி எடுத்துட்டு, 'போதும், அவங்களுக்கு இதுவே பெருசு'ன்ற எண்ணத்துல போனோம்.

அந்த ஊரு மெயின் ரோட்டுல இருந்து உள்ளாற மூணு நாலு கிலோ மீட்டர் இருக்கும். மெயின் ரோட்டில இருந்து தோரணமா கட்டிருந்துச்சு. வேற எதுவும் விசேசம் போலன்னு நெனச்சிக்கிட்டேன். ஆனா போகப்போகத்தான் தெரிஞ்சுது, அது கீரக்காரம்மா வீட்டுக்கலியாணத்துக்கானதுனு. ஊரு பூராம்வாழ்த்து போஸ்ட்டர் அடிச்சி ஒட்டிருந்துச்சு. போகப்போக வரிசையா விலை உயர்ந்த காருகளா நின்னுச்சு. எல்லாம் கலியாணத்துக்கு வந்தது போல..
கலியாணம் நடக்குற வீடுன்னு சொன்னா அடிச்சிப்புடுவாங்க. அவ்வளவு பெரிய பங்களா. தெருவே அடைச்சிப்பந்தல், எக்கசக்கக்கூட்டம். ஒரே பட்டுச்சேலை பெண்கள். அவங்களோட கம்பேர் பண்ணிப்பாத்தா நாங்க ரொம்ப சுமார். உள்ளாற விடுவாங்களோன்ற மாதிரி. எனக்கே கூச்சமாப்போச்சு. வெளிய தயக்கத்தோட நின்னப்ப கீரக்காரம்மா தற்செயலா வெளிய வந்துச்சு.

எங்களைப்பாத்துட்டு நேரா கிட்ட வந்து வாங்கய்யானு கூப்புட்டுட்டுப்போச்சு. எனக்கு அடையாளமே தெரியல. அரையடி பார்டர் பட்டுச்சேலை, கழுத்துபூராம் நகைகள்.. பெரிய ஜமீன்தாரம்மா மாதிரி ஜொலிச்சிச்சி. எங்கள உள்ளார கூட்டிட்டுப்போய் எல்லா பட்டுச்சேலைகளைகாரங்களையும் ஒதுக்கி விட்டுட்டு மணமக்களை கூப்புட்டு கால்ல விழுகச்சொல்லிச்சி. அய்யா ஒங்களைபோல படிச்ச பெரியவுக ஆசீர்வாதம் பண்ணனும்ன்னு சொல்லிச்சி. நாங்க ஆசீர்வாதம் பண்ணுனோம். கொண்டு போயிருந்த 200 ரூவா கவர் கூசிச்சி. எப்புடிக்குடுக்குறதுன்னு யோசனை வந்துச்சு. வேற வழியில்லாம குடுத்துட்டு திரும்புனவன வாங்கய்யான்னு கூட்டிட்டுப்போய் தனியா டேபிள் ஒதுக்கி பக்கத்துல நின்னு சாப்பாடு பரிமாறி சாப்புட வச்சி கெளம்பும் போது தாம்பூலப்பைன்னு ஒண்ணு குடுத்துச்சு. ரொம்ப சந்தோசமுய்யா நீங்க வந்துதுலன்னு மனம் சந்தோசத்தோட வழி அனுப்புச்சு.

வீட்டுல வந்து தாம்பூலப்பையப் பிரிச்சா அதுக்குள்ள வெள்ளி சிமிழ்கள் ரெண்டு இருந்துச்சு. எனக்கு ஒருமாதிரி ஆகிப்போச்சு. இது புரியவே இல்ல. அப்பத்தான் அவங்க குடுத்த கலியாணப்பத்திரிக்கைய பிரிச்சி படிச்சு அதிர்ந்து போனேன். அந்த ஊருல பெரிய வெவசாயக்குடும்பம் அது. மகன் பேருக்கு நேர M.Sc (Agriculture) ன்னும் பொண்ணு பேருக்கு நேரயும் M.Sc (Agriculture)ன்னும் போட்டிருந்துச்சு. சொந்தக்காரங்க எல்லாம் பெரிய படிப்பு பதவில இருக்குறதும் தெரிஞ்சது,
அடுத்தவாரம் ஞாயத்துக்கெழம அதே கீரக்காரம்மா பழையபடி கீரைக்கூடையோட வந்துச்சு. என்னால ஆவல அடக்க முடியல இத விசாரிக்கனும்ன்னு தோணிச்சு . அவங்களை வீட்டுக்குள்ள கூப்புட்டு ஒக்கார வைச்சி மரியாதையோட விசாரிச்சப்ப அந்த அம்மா சொல்லிச்சி..

"உங்களுக்கு சந்தேகம் வந்தது ஞாயம்தான். அந்த ஊருல வெவசாயக்குடும்பம் நாங்க. அஞ்சு ஏக்கரு கீரை பயிரிட்டு இருக்குறோம். மகன்தான் படிச்சிட்டு வெவசாயத்துக்கு ஒதவி பண்ணுறான். அந்த விவசாயக் கல்லூரிலதான் வேலை பாக்குறான். பொண்ணும் அதே கல்லூரிதான். அவளுக்கும் வெவசாய்த்துல ஆர்வம். அதுனாலதான் இந்த காதல் கலியாணம். முறையா வெவசாயம் செஞ்சி தரகர் இல்லாம நாங்களே வியாபாரமும் பண்ணுறோம். காலையில வேன்ல கொண்டாந்து எறக்கி தனித்தனியா கூடையில சொமந்து விக்கிறோம். நான் ஆர்வத்தோட நடந்து விக்கிறதால ஒடம்பும் நல்லாருக்கு. லாபமும் கெடைக்கிது"ன்னு சொல்லிச்சி.

அந்தம்மா தோற்றத்தப்பத்தி கேட்டேன், "ஏன், அங்க ராணி மாதிரி இருந்த நீங்க இங்க கீரை விக்கிறப்ப இப்புடி?"ன்னு கேட்டேன். அதுக்கு சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி, "கீர விக்கிறப்ப பட்டுச்சேலையும் நகை நட்டோட வந்தா நல்லாருக்குமா? ஆராவது என்கிட்ட கீர வாங்குவாகளான்னு..?"

அப்ப, நாம சும்மா 40 ஆயிரம் மாசச்சம்பளம் வாங்குற நாம என்னா அலட்டு அலட்டிகிட்டு இருக்குறோம்னு நெனைக்கிறப்ப வெக்கமா இருந்துச்சு. அந்த விவசாயத்தாயை கையெடுத்துக் கும்புடத்தோணிச்சி.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" என்ற அய்யன் குறள் நெனவுக்கு வந்துச்சு..

பகிர்வு கதை..
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்
Blogger இயக்குவது.