எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் அபராதம்


அபுதாபி


எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.17 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவிட்டு உள்ளது.

எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை திங்களன்று ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த அபுதாபி நிர்வாகம் தெய்வீக அமைப்பு, மதம், நபி தூதர், தெய்வீக புத்தகம் அல்லது வழிபாட்டு தலத்தை அவமதிக்கும் எந்தவொரு செயலும் மதத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்று வளைகுடா செய்தி தெரிவித்துள்ளது.

புதிய உத்தரவு குறித்து அபுதாபி நீதித்துறையின் சமூக பொறுப்புணர்வு நிபுணர் அமீனா அல் மஸ்ரூய் கூறும்போது, மக்கள் தங்கள் சாதி, மதம் மற்றும் நிற அடிப்படையில் வேறுபடுத்தப்படுவதை நாங்கள் எதிர்த்து நிற்கிறோம்.  அவ்வாறு செய்பவர் குற்றவாளி ஆவார். அவர் ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார் மற்றும் நாட்டின் விதிகளின்படி 1 மில்லியன் டாலர் வரை அபராதம் விதிக்கப்படுவார்.

நாங்கள் எல்லா மனிதர்களையும் மதிக்கிறோம், அவர்களுக்கு நியாயமான சேவைகளையும் நீதியையும் பெறுவதை உறுதிசெய்கிறோம். அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மதம், தேசியம், பின்னணி அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சமமாக நடத்தப்படுகிறார்கள். அனைவருக்கும் சமமாக நீதி கிடைக்கும் என கூறினார்.


மேலும் அவர் நீதித்துறை சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனிப்பதாகக் கூறினார்.
மக்கள் சமூக ஊடக தளங்களில் பேசுகிறார்களானால், அவர்கள் எந்த மதத்தையும், நம்பிக்கையையும், கடவுளையும் அவமதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி மீறல் ஏற்பட்டால் குற்றவாளிகள் மதச் சட்டங்களை அவமதித்ததாக  குற்றஞ்சாட்டப்படுவார்கள், அபராதம் விதிக்கப்படுவார்கள்.

சமூக ஊடகங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பலர் இப்போது விருப்பப்படி செய்திகளை அனுப்புகிறார்கள், மேலும் அவர்கள் சிலரின் உணர்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்துகிறோம் என்பதை  உணரவில்லை என கூறினார்.

2015 ஆம் ஆண்டின் பெடரல் சட்ட எண் (2)ன் கீழ் பாகுபாடு மற்றும் வெறுப்பு தொடர்பான ஆர்ட்டிக்கல் (4) குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது. இந்த வழக்குகளில் அபராதம் 250,000 முதல் 1 மில்லியன் வரை இருக்கும்.

இந்த சட்டம்  பின்வருவனவற்றைப் பற்றியது:- எந்தவொரு மதத்தையும் அல்லது அதன் புனிதமான விஷயங்களையும் புண்படுத்துவது, வன்முறையால் மத அனுசரிப்புகள் அல்லது விழாக்களை சீர்குலைத்தல் அல்லது தடுப்பது, எந்த வகையிலும் சிதைப்பது, எந்த புனித நூல்களும், வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள், சின்னங்கள் ஆகியவற்றை அழித்தல் அல்லது தீங்கு செய்தல் ஆகும்.

புதிய சட்டம்  ஒரு மதத்தை அவமதித்தல் அதை இழிவுபடுத்துதல் அல்லது வழிபாட்டு தலத்தை அழிக்கும் அனைவருக்கும் பொருந்தும். மசூதி, கோவில், தேவாலயம் அல்லது குருத்வாரா ஆகியவை இதில் அடங்கும்.


Blogger இயக்குவது.