கைலாசா நாட்டிற்கு சென்றாரா தமிழக இளைஞர்?


நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ மருத்துவர் ஒருவர் மீண்டும் காணமல் போயிருப்பதால், பெற்றோர் மிகுந்த வேதனையுடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இந்தியாவை விட்டு தப்பி ஈக்வடார் நாட்டின் அருகே இருக்கும் தீவில் பதுங்கியிருக்கும் நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் இருக்கப்போவதாக வீடியோ வெளியிட்டார். 

ஆனால் நித்தியானந்தாவின் கோரிக்கையை ஈக்வடார் அரசு நிராகரித்துவிட்டதாகவும், அவர் அங்கில்லை என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் நித்தியானந்தா தினந்தோறும் நேரலையில் வந்து ஏதேனும் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசிவிட்டு செல்கிறார்.

இந்நிலையில் தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரும், நித்யானந்தாவின் சீடருமான மனோஜ்குமாரைக் காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் காந்தி(61), ஓய்வு பெற்ற அரசு மருந்தாளுநரான இவருக்கு மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார். 

மனோஜ்குமார் மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த போது, கடந்த 2018-ஆம் ஆண்டு அவரது அக்கா வனிதாவின் மகள், நிவேதாவுடன் திடீரென மாயமானார். இதனால் குடும்பத்தினர் அவரை தேடிய போது, மனோஜ் நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள மடத்தில் நிவேதாவுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

 இது குறித்து பொலிசாரிடம் புகார் கொடுக்க, பொலிசார் தனிப்படை அமைத்து இருவரையு மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பிய மனோஜிடம் குடும்பத்தினர் அறிவுரை கூற, அவர் தேனி தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

இப்போது ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் நித்தியானந்தாவை பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கும், கடந்த சில நாட்களாகவே மனோஜ்குமார் உறவினர்களிடம் நித்தியானந்தாவைப் பற்றி பேசிவந்த நிலையில், திடீரென்று மனோஜ்குமாரைக் காணவில்லை என அவரது தந்தை காந்தி, பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் இன்று புகார் கொடுத்துள்ளனர்.

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெரும் முயற்சி செய்து மீட்கப்பட்ட அரசு மருத்துவர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் தற்போது நித்யானந்தா குறித்த வீடியோ வெளியாகி வரும் நிலையில் கைலாசா நாட்டுக்கு செல்ல ஏராளமானோர் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருவவதாக கூறப்படும் நிலையில், இதனால் தனது மகனும் நித்யானந்தா இருக்கும் கைலாசா நாட்டுக்கு சென்று விட்டாரா? என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
Blogger இயக்குவது.