பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ”என் மகன் திருநாவுக்கரசை சட்டப்படி போராடி கொண்டுவருவேன்”


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்தது குறித்து பெண் ஒருவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் என நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் இருக்கும் நிலை உருவானது.

அதேநேரத்தில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டியிடம் இருந்து சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கோவை மத்திய சிறையில் இருந்த நான்கு பேரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் பெற்றோர் குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின்கீழ்தான் விசாரிக்க வேண்டும் எனவும், குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்க பிறப்பித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவின் ஆவணங்கள் உரிய நேரத்தில் பெற்றோர்களிடம் வழங்கப்படவில்லை. அதேபோல், ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதிகள் தெளிவாக இல்லாமல் உள்ளது எனக்கூறி திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.

என் மகனை வெளியில் கொண்டு வருவேன்”

இதுகுறித்து திருநாவுக்கரசின் தாய் லதா பிபிசியிடம் பேசுகையில், ”கடவுளை மட்டுமே நான் நம்பியுள்ளேன். என் மகனை கைது செய்த நாளிலிருந்து, வழக்கறிஞரின் உதவியில்லாமல் நான் தனியாக நேரடியாகவே போராடி வருகிறேன். என் மகனை வெளியில் கொண்டுவர அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றார்.

குற்றஞ்சாட்டப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து மகளிர் நல அமைப்பினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

”சிபிஐ வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும்”

பிபிசியிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், கோவை மாவட்ட செயலர் ராதிகா, ”குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு போடப்பட்டதற்கான ஆதாரங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டியது அரசு தரப்பின் முக்கிய பணியாகும். ஆனால், ஆளும் கட்சியின் தலையீட்டின் காரணமாக அரசுத் தரப்பு வழக்கை பலப்படுத்த முடியாமல் குண்டர் சட்டத்தின்கீழ் பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கை பலப்படுத்த வேண்டிய அரசே, அரசியல் தலையீட்டின் காரணமாக பின்வாங்கியுள்ளது. தற்போது விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ இதேபோல் பின்வாங்காமல், நேர்மையான முறையில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்' என்றார்.


Blogger இயக்குவது.