தேர்வில் பார்த்து எழுதுவதை தவிர்க்க கல்லூரியின் வினோத முறை!! குவியும் கண்டனம்!


இந்த செயலை நியாயப்படுத்தும் வகையில், கல்லூரித் தலைவர் எம்.பி. சதீஷ் , பீகாரில் உள்ள ஒரு கல்லூரியிலும், இதேபோன்ற முறையைப் பயன்படுத்தியது, அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டது என்றும் கூறினார்.

கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க அவர்கள் தலையில் அட்டைப்பெட்டியை கவத்தி வைத்து தேர்வு எழுத வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரிலிருந்து 330கி.மீ தொலைவில் உள்ள ஹவேரியில் உள்ளது பகத் பி.யூ. கல்லூரி. தனியாருக்கு சொந்தமான இந்த கல்லூரியில் மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டியை கவத்தி வைத்து தேர்வு எழுத வைத்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவலாக பரப்பப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பான புகைப்படங்களில், மாணவர்களை அட்டைப்பெட்டி வைத்து தேர்வு எழுத வைத்ததோடு, அவர்கள் எழுதுவதை ஆய்வாளர்கள் கண்காணித்தும் வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறும்போது, இந்த சம்பவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகளைப் போல நடத்த யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செயலை நியாயப்படுத்தும் வகையில், கல்லூரித் தலைவர் எம்.பி. சதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகாரில் உள்ள ஒரு கல்லூரியிலும், தேர்வுகளின் போது மோசடிகளைத் தடுக்க இதேபோன்ற முறையைப் பயன்படுத்தியது என்றும், அது சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டது என்றும் கூறினார்.

மேலும், இந்த புதிய முயற்சி எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்க்கவே நாங்கள் முயற்சித்தோம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளை எழுதுவதற்கு அமர்வதற்கு முன்பு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் அட்டை பெட்டிகள் வழங்கப்படும் என்று நாங்கள் மாணவர்களிடம் கூறியிருந்தோம்," என்று அவர் செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்-யிடம் தெரிவித்துள்ளார்.


Blogger இயக்குவது.