‘தொடர முடியாத சீனக் கப்பல்கள் தொடர்பில் கவலை’


ஐக்கிய அமெரிக்கத் தடைகளின் மீறலாக ஈரானின் எண்ணெய்ப் பரிமாற்றங்களை மறைப்பதற்காக கப்பல்களின் அடையாளங் காணும் கருவிகளை நிறுத்தி வைப்பதற்கெதிராக சீனக் கப்பல் நிறுவனங்களை வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் பிரதான ஏற்றுமதியான மசகெண்ணெய் மீது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தடைகளை விதித்ததையடுத்து ஈரானின் எண்ணெய்யை வாங்கும் எஞ்சியிருக்கும் பெரிய நாடாக சீனா காணப்படுகின்றது.

ஈரானின் எண்ணெய் விற்பனையை பூச்சியமாக்கும் வகையில் இவ்வாண்டு மே மாதத்தில் ஐக்கிய அமெரிக்காவின் தடைகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுக்கியிருந்தார்.

அந்தவகையில், நாளொன்றுக்கு 2.5 மில்லியன் பரல்களாக இருந்த ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியானது 400,000 பரல்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்திருந்தது.

இந்நிலையில், தடைகளை மீறி ஈரானிய எண்ணெய்யை பரிமாறுவதாக ஐந்து சீனத் தனிநபர்கள் மற்றும் சீன கொஸ்கோ கப்பல் நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்கள் மீது கடந்த மாதம் 25ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது.

எவ்வாறெனினும் சில நாட்கள் கழித்து, கொஸ்கோ எண்ணெய்க் கப்பல்கள் படையணியின் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கிலான 14 கப்பல்கள் கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் இம்மாதம் ஏழாம் திகதி வரை தமது கப்பல்கள் அடையாளங் காணப்படுவதை நிறுத்தியிருந்தன.


Blogger இயக்குவது.