காஷ்மீர் தாக்குதல் இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் தாக்கம் செலுத்துமா?


கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையினரின் வாகனங்கள் இலக்கு வைக்கப்பட்டன.

அந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீதான இந்திய மக்களின் சீற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அது விளையாட்டு உலகையும் விட்டு வைக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கர், தனது ட்விட்டர் பதிவில், 'கொடூரமான, மிருகத்தனமான, அர்த்தமற்ற இந்தத் தாக்குதலில் தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பங்களை நினைத்து மனம் வாடுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன். உங்களின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் விசுவாசத்திற்கு தலை வணங்குகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

"மிகவும் வருத்தமளிக்கிறது. வருத்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை," என்று வீரேந்திர சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை பதிவிட்டிருந்தார்.

மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதிர்ச்சி வெளியிட்டிருந்தார்.

தாக்குதலுக்கு உள்ளான சி.ஆர்.பி.எஃப் வாகனம்
இவை அனைத்தும் எதை குறிக்கின்றன? குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விளையாட்டு ரீதியிலான உறவை பாதிக்குமா?

இதற்கு இப்படி பதிலளிக்கிறார் கிரிக்கெட் விமர்சகர் அயாஜ் மேமன்: "இது மாபெரும் பிரச்சனையாகிவிட்டது, அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டில்… இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரஸ்பரம் விளையாடுமா என்ற கேள்வியை இந்தத் தாக்குதல் எழுப்பியிருக்கிறது."

உலகக் கோப்பை போட்டித் தொடரில், இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, மான்செஸ்டரில் ஜுன் மாதம் 16ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.

இந்தியா உலகக்கோப்பை போட்டியை புறக்கணிக்காது என்றாலும், இரண்டு புள்ளிகளை இழந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் இருக்கும் சாத்தியங்களை மறுக்க முடியாது.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து நல்ல சமிக்ஞை ஏதாவது கிடைத்து, உறவுகள் ஓரளவாவது சீரடைந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியில் மோதும். ஆனால், தற்போதைய சூழலும், இந்திய அணியின் மனோநிலையும், உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் முடிவை எடுக்கச் செய்யாது என்றே தோன்றுகிறது என்று சொல்கிறார் அயாஜ் மேமன்.

இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடவிருந்தன.

அப்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள கார்கில் என்ற இடத்தில், இரு தரப்பு ராணுவமும் மோதிக் கொண்டிருந்தன.

அந்த இக்கட்டான சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டையின் காரணமாக, கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானதாக கிரிக்கெட் நிபுணர் பிரதீப் மைக்ஜீன் கூறுகிறார்.

கார்கில் மோதலின் தாக்கம் மான்செஸ்டர் போட்டியை பாதித்துவிடுமோ என்ற அச்சம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் இருந்தது. ஆனால் அந்த போட்டி நடைபெற்றது.

அந்த சூழலும் கடந்தது; அதன்பிறகு பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் பலமுறை இந்திய மண்ணுக்கு வந்து விளையாடிச் சென்றனர்.

தாக்குதலுக்கு பிறகு பேரணி
ஆனால் இன்றைய சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கடந்த சனிக்கிழமையன்று இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.

திறமையான மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, விராட் கோலியின் அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர, பி.சி.சி.ஐ-யின் அங்கீகாரம் பெற்ற கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவும், புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை அகற்றியது.

பிராபோர்ன் ஸ்டேடியத்தின் வளாகத்தில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன. 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்கு பெற்றுக் கொடுத்த, அந்நாட்டின் இன்றைய பிரதமரான இம்ரான் கானின் புகைப்படமும் அதில் ஒன்று.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இந்த விசயத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று சொல்கிறார் அயாஜ் மேமன். கிரிக்கெட் ஆல்ரவுண்டர் என்ற அவரது விளையாட்டு திறமைக்காக வைக்கப்பட்ட புகைப்படம், அவர் தற்போது பாகிஸ்தானின் பிரதமர் என்பதால் நீக்கப்பட்டதில் தனக்கு உடன்பாடில்லை என்கிறார் அவர்.

இது தனது தனிப்பட்ட கருத்து என்று கூறும் அவர், அரசியலில் இருந்து விளையாட்டு தள்ளி வைக்கப்பட்டால் நல்லது என்றும் கருதுகிறார்.

கிரிக்கெட் விளையாட்டை விடுங்கள், டென்னிசும் பாகிஸ்தானின் புல்வாமா தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இந்திய டேவிஸ் கோப்பை அணி தனது அடுத்த போட்டியை வரும் செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் அணியை அதன் தாயகத்திலேயே எதிர் கொள்ளவிருக்கிறது.

1964ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதில்லை.

லாகூரில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

1971ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் அணி, பாகிஸ்தானுக்கு செல்ல திட்டமிருந்தபோதிலும், அங்கு செல்லாததால், விளையாடாமலேயே புள்ளிகளை இழக்க வேண்டியிருந்தது.

தற்போது, இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால், தகுதிச்சுற்றில் இந்தியா வெளியேற நேரிடும்.

அந்த சூழ்நிலையில், மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா, பாகிஸ்தானுக்கு அளிக்க முடியுமா?

இது குறித்து இந்திய டேவிஸ் கோப்பை குழுவின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஜீஷான் அலியிடம் பேசினோம். இந்திய டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் சங்கத்திடம் பேசும்போது தான் இதுபற்றி முடிவெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.


சானியா மிர்சா
இதைத்தவிர, இந்திய அரசு, அந்த சமயத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்தே இரு நாடுகளின் போட்டி நடைபெறுமா இல்லையா என்பதை கூறமுடியும்.

இந்தியாவில் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 14, இந்தியாவுக்கு கருப்பு தினம் என்று அவர் தனது தனது இன்ஸ்ட்ராகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிலைமையில் என்ன நடக்கக்கூடும்?
பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாது என்று இந்திய அரசு தரப்பில் இருந்து யாரும் கூறவில்லை என்கிறார் அயாஜ் மேமன்.

இருந்தாலும், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கோபச் சீற்றத்தை அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தணிக்க முடியும். எதிர்காலம் எதுபோன்ற திருப்பங்களை வைத்திருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?


Blogger இயக்குவது.