அதிரடியாகக் கலைக்கப்பட்டது சிறிலங்கா நாடாளுமன்றம்!! அதிர்ச்சியில் மக்கள்

சிறிலங்கா நாடாளுமன்றம் சற்றுமுன்னர் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி உத்தரவை எடுத்துள்ளதாக ஏ.எப்.பீ நிறுவனம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய பிரதமராக முன்னாள் அரச தலைவர் மிந்த ராஜபக்சவை நியமித்த மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் 26 ஆம் திகதி ரணிலை அதிரடியாக நீக்கியிருந்தார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரசியலில் பெரும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படப் போவதாக தகவல்கள் வெளியாகிவந்தன.

எனினும் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று மைத்ரி மஹிந்த அரசாங்கம் அறிவித்துவந்த நிலையில் சற்று முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க அரச தலைவர் உத்தரவிட்டிருக்கின்றார்.

இதேவேளை இன்றைய தினம் நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று கொழும்பு அரசியலில் செய்திகள் பரவியிருந்ததால் அரசியலில் பெரும் பதற்றமான நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற செய்தி வேகமாக பரவி வருவது குறித்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வாவும் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார். .

நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குத் தேவையான 113 உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிக்கொள்ள முடியாததை அடுத்தே மைத்ரி – மஹிந்த கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதனாலேயே அவச அவசரமாக அமைச்சர்களை நியமித்து வருவதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை இதன் மூலம் பொதுத் தேர்தலொன்று நடைபெறும் போது முழுமையான அரச அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்வதற்கும் மைதரி – மஹிந்த குர்டணி திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள ஹர்ஷ டி சில்வா, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்றும் கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த இந்தத் தகவல்களால் கொழும்பிலுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக ராஜதந்திரத் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தமை மற்றும் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தமை தொடர்பில் கடும் ஆத்திரத்துடன் காணப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதால், அதனை செய்ய வேண்டாம் என்று சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு நேரடியாக தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் தெளிவுபடுத்தி கடுமையான எச்சரிக்கைகளையும் விடுத்திருப்பதாக நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்குத் தேவையான 113 பேரின் ஆதரவை திரட்டிக்கொள்வதில் மைதரி – மஹிந்த கூட்டணி தொடர்ந்தும் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது.

இதனாலேயே நேரடியாக அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளிள் தலைவர்கள் உள்ளிடட நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மஹிந்தவிற்கு ஆதரவு வழங்குவதற்காக பேரம் பேசியதாகவும் மைத்ரி – மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இந்த முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் வேறு வழியின்றி நாடாளுமன்றத்தை கலைப்பது என்ற முடிவிற்கு அவர் தள்ளப்பட்டிருப்பதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத மஹிந்த ராஜபக்சவின் மிக நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
Blogger இயக்குவது.