ஏ ஆர் ரஹ்மானின் காமன்வெல்த் பாடல் "ஸ்வாகதம்" டெல்லியில் வெளியீடு

டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் (Commonwealth Games) போட்டிக்கான தீம் பாடலை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஸ்வாகதம் என்ற பெயரிலான இந்தப் பாடலை மத்திய அமைச்சரவைக் குழுவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்படைத்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியின் தலைமையிலான அமைச்சரவைக் குழு இந்தப் பாடலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் பாடல் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய்பால் ரெட்டி இன்னும் 10 நாள் அவகாசத்தில் பாடலை வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளும் முடிவடையும் என்றார்.இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் 'ஸ்வாகதம்' பாடலை ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகம் செய்தார்.இவ்விழாவில் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடி கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய இவர்,
ஏ.ஆர்.ரஹ்மானை 'இந்தியாவின் மொசாட்' என வர்ணித்தார்.

பின்னர் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடி காண்பித்ததுடன் ஸ்வாகதம் பாடலை தான் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் காமன்வெல்த் போட்டிகள் குறித்து சர்ச்சைக்குரிய விஷயங்களை எடுத்துக் கூறும் ஊடகங்கள் நல்ல விஷயங்களையும் வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். அவற்றை பற்றிய செய்திகளையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஏ.ஆர். உருவாக்கியுள்ள 'ஸ்வாகதம்' தீம் பாடல் அவருடைய முந்தைய 'ஜெய் ஹோ' பாடலைப்போல, உலகக் கால்பந்து போட்டியில் பாடப்பட்ட பாடகி ஷகிராவின் 'வக்கா வக்கா' போல உலக மக்களை கவரும் விதத்தில் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

'ஸ்வாகதம்' பாடல் காமன்வெல்த் போட்டிகளின் துவக்க நாள் மற்றும் நிறைவு நாள் கொண்டாட்டங்களின்போது பாடப்பட உள்ளது. இந்தப் பாடலை உருவாக்க ஏ.ஆர். ரஹ்மானுக்கு சம்பளமாக ரூ.5 கோடி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.