ரஷ்யாவில் காட்டுத் தீ: தினமும் 700 பேரை பலி வாங்கும்


ரஷ்யாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் தினசரி 700 க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத் திணறி இறந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 300 இல் இருந்து 350 ஆக இருந்த இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காகி உள்ளது ரஷ்ய அரசை ஆட்டம் காண செய்துள்ளது.

முதலில் வடரஷ்ய பகுதியில் உள்ள புதர்களும், புதர்களையொட்டிய காடுகளும் எரியத் தொடங்கின. காட்டுத் தீயின் வீரியம் அதிகமாகி அந்நாடு முழுக்க 550 புதர் பகுதிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பற்றி எரிந்துகொண்டிருக்கும் காட்டுப்பகுதிகளில் 40 தலைநகர் மாஸ்கோவைச் சுற்றி உள்ளன. காட்டுத் தீ தொடர்ந்து எரிவதால் எழும் புகையால் மாஸ்கோ நகரம் எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காட்டுத் தீ புகையால் மாஸ்கோ நகர காற்றில் கார்பன் மோனாக்சைடின் அளவும், பிற விஷ வாயுக்களின் அளவும் வழக்கமான அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகக் கலந்துவிட்டதால் பொதுமக்கள் மூச்சுத் திணறி அங்கங்கே சுருண்டு விழுந்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் 300இல் இருந்து 350 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை இவ்வாரம் இரண்டு மடங்காகி உள்ளது.

ரஷ்ய தீயணைப்புத் துறையினரும்(10000வீரர்கள்), ராணுவ மீட்புக் குழுவும் தீயை அணைக்க போராடி வந்ததாலும், தீயின் கோர நாக்குகள் எல்லை மீறிக்கொண்டே இருக்கின்றன.

ரஷ்யாவின் காட்டுத்தீயால் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் வெப்ப அலைகள் சுழன்று சுழன்று அடிக்கின்றன. ரஷ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

ரஷ்யாவின் கோடைகால அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ். காட்டுத் தீ காரணமாக வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ் தொட்டிருக்கிறது. குளிர் பிரதேச வாசிகளான ரஷ்யர்கள் இந்த வெப்பநிலையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ரஷ்ய காட்டுத் தீயால் சர்வதேச அளவிலும் வெப்ப நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. 2003 இல் ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட வெப்ப அலைகளைக் காட்டிலும் அதிக உயிரழப்பை தற்போதைய காட்டுத் தீ ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறது அந்த அமைப்பு.

ஒவ்வொரு இரவும் போருக்கு புறப்படுவது இருக்கிறது என்கின்றனர் ரஷ்யர்கள்.'வீட்டின் ஜன்னலைத் திறந்தால் அனலுடன் நச்சுவாயுக்கள் கலந்த காற்றை சுவாசிக்க வேண்டியிருக்கும். மூடினாலோ, அதிகபட்ச வெப்பத்தில் வேர்வையில் நனைய வேண்டும். எங்கே உறங்குவது?' என்று புலம்புகிறார்கள் ரஷ்யர்கள்.

Blogger இயக்குவது.