காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மூக்கு உடைந்தது

சினிமா படப்பிடிப்பில் நடந்த கல்வீச்சில், நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கு உடைந்தது. தைரியம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான குமரன் இப்போது, வருஷநாடு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை டைரக்டர் சூரிய பிரகாஷ் இயக்குகிறார். படப்பிடிப்பு, திண்டுக்கல் பகுதியில் நடைபெறுகிறது. நகைச்சுவை நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சிங்கம்புலி, மயில்சாமி ஆகியோர் நடித்த காட்சி தற்போது படமாக்கப்பட்டது.

காட்சியின்படி எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி ஒரு அணியாகவும், சிங்கமுத்து, மயில்சாமி இன்னொரு அணியாகவும் இருந்து, எதிர் எதிராக இரு அணியினரும் மோதிக்கொள்கிறார்கள்.

இரு தரப்பினரும் கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது போல் காட்சி படமாகிக்கொண்டிருந்தது. இந்த காட்சியில் நிஜமான கற்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு கல், எம்.எஸ்.பாஸ்கரின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டியது. அந்த வேதனையிலும் எம்.எஸ்.பாஸ்கர், “ஏய், என் முக்கை உடைச்சிட்டான்…அடிடா…அடிடா” என்று சத்தம் போட்டு வசனம் பேசி நடித்தார்.

காட்சி முடிந்ததும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் அதிகமாக வருவதை பார்த்த டைரக்டர் சூர்யபிரகாஷ் பதறிப்போனார். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
Blogger இயக்குவது.