பாடகசாலை – திரை விமர்சனம்

நடிகர்கள்: அரவிந்த், சத்யா, ஸ்ருதி
இசை: ஹிதேஷ்
ஒளிப்பதிவு – இயக்கம்: தமிழ் ஜெ
தயாரிப்பு: அனில் டி

கோடம்பாக்கத்தில் எத்தனையோ இளைஞர்கள் நல்ல கதைகள், திரைக்கதைகளோடு வலம் வருகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு அமைவதில்லை. அப்படி வாய்ப்பு கிடைக்கப்பெற்ற எல்லோரும் அதை வைத்து நல்ல படங்களைத் தருவதுமில்லை. அப்படிப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார் தமிழ் ஜெ, பாடக சாலை படம் மூலம்.
இந்தப் படத்தின் தலைப்புக்கு கீழே தரப்பட்டுள்ள துணைத் தலைப்பு போலவே, இனிமேல்தான் இந்த இயக்குநர் படிக்க வேண்டும், சினிமாவில்.
ஒரு காதலால் பிரிந்த இரண்டு ஊர்களை மீண்டும் ஒரு காதலால் சேர்த்து வைக்க ஊர் இளைஞர்கள் போராடுவது என்ற ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு இயக்குநர் எப்படியெல்லாம் சிலம்பம் விளையாடி இருக்கலாம்…. ம்ஹூம்… இந்தப் பட இயக்குநர் ஒரு அடி கூட எடுத்து வைக்கவே இல்லை.
மேல் கத்தப்பட்டு, கீழ் கத்தப்பட்டு என்று இரு கிராமங்கள். இந்த கிராமங்களைச் சேர்ந்த ஒரு ஜோடி, ஜாதி மாறி காதலிக்கிறது. அதை அவர்கள் குடும்பம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் ஊர் ஏற்க மறுக்கிறது. ஒரு கபடிப் போட்டியில் அந்த வெறுப்பு வெடித்து ஊரே இரண்டுபட, ஊரைவிட்டே ஓடிப்போகிறது காதல் ஜோடி. அதில் ஊரே பகையாகிறது.
இந்த ஓடிப்போன காதல் ஜோடியின் மகளுக்கும் கீழ் கத்தப்பட்டு கிராம இளைஞன் ஒருவனுக்கும் காதல் முளைக்கிறது. இந்தக் காதலை வைத்தே மீண்டும் இரு கிராமங்களையும் இணைக்க முயல்கிறார்கள். அதற்காக மீண்டும் ஒரு கபடி போட்டி நடத்தி அதில் ஜெயிக்கும் அணித் தலைவனுக்கு பெண்ணைக் கட்டி வைத்து சண்டையை முடித்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதில் வெற்றி கிடைத்ததா என்பது க்ளைமாக்ஸ்.
அரவிந்த், சத்யா என இரு புது நாயகர்கள். இதில் அரவிந்த் பரவாயில்லை. இன்னும் நல்ல களையான பெண்ணை ஹீரோயினாக்கியிருக்கலாம். துணைக்கு வருகிற நாயகிகள் கூட தியேட்டரை விட்டு நம்மை துரத்தும் ரகமாகவே உள்ளனர்.
ஹித்தேஷ் என்பவரின் இசை மட்டும் ஓகே.
இயக்கம் ஒளிப்பதிவு இரண்டிலுமே கோட்டை விட்டுவிட்டார் இயக்குநர் தமிழ் ஜெ.
இந்தப் படத்துக்கு செலவு கோடிகளில் என்று கணக்கு சொல்கிறார்கள்.
கஷ்டகாலம் தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும்தான்!
Blogger இயக்குவது.